இறுக்கமான ஜீன்ஸ் அணிந்தால் ஆபத்து!



17-ம் நூற்றாண்டில் பிரான்சின் ஆதிக்கத்தில் இத்தாலி இருந்தது. அப்போது இத்தாலியில் உள்ள ஒரு நகரத்தின் பெயர், ஜெனோவா. அங்குள்ள படை வீரர்கள் பாதுகாப்புக்காக கெட்டியான துணியால் பேண்ட் அணியத் தொடங்கினார்கள். அந்த உடை அப்போது வித்தியாசமாக இருந்ததால், ஜெனோவா என்ற நகரத்தோடு இணைத்து ஜீன்ஸ் என்று அந்த உடைக்கு பெயரிட்டார்கள்.

20-ம் நூற்றாண்டில் பேஷன் உலகம் அதை தத்து எடுத்துக்கொண்ட பிறகுதான் இந்த ஜீன்ஸ் உலகம் பிரசித்தி பெறத் தொடங்கியது.

முதலில் காட்டன், லினன், கம்பளி போன்ற துணிகளை பயன் படுத்தி ஜீன்ஸ் தயாரித்தார்கள். அடர்த்தி கூடிய துணியாக அது இருந்ததால் 19-ம் நூற்றாண்டில் கலிபோர்னியாவில் உள்ள தங்க சுரங்க பணியாளர்கள், வேலை நேரத்தில் அதனை அணிந்தார்கள். பின்பு தொழிற்சாலை பணியாளர்கள் அதை அணிந்தனர்.

அப்படி, இப்படி அது வளர்ச்சி பெற்றுக்கொண்டிருந்தாலும் அமெரிக்காவில் `கவுபாய்’ சினிமா நடிகர்கள் அதை அணிய ஆரம்பித்த பிறகுதான் ஜீன்ஸ் புகழின் உச்சிக்கு சென்றது. அந்த காலகட்டத்தில் ஜீன்ஸ் ஆண்கள் அணியும் உடையாக மட்டுமே இருந்தது.
கெட்டியான, பாதுகாப்பான உடையாக அது இருந்ததால் விவசாய வேலை பார்க்கும் பெண்களும், பண்ணைகளில் வேலை பார்க்கும் பெண்களும் முதலில் ஜீன்ஸ் அணியத் தொடங்கினார்கள். அப்படியே மெல்ல மெல்ல எல்லா பெண்களும் அணியலாம் என்ற நிலை ஏற்பட்டதும் ஜீன்ஸ் புரட்சி தொடங்கிவிட்டது.

இப்போது ஆண்களும், பெண்களும் வயது வித்தியாசம் இன்றி ஜீன்ஸ் அணிகிறார்கள். 
இப்படி எல்லோரும் ஜீன்ஸ்களை அணிந்தாலும், இறுக்கமான ஜீன்ஸ்களை தொடர்ச்சியாக அணியும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் அதனால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது ஆய்வு ரீதியாக நிரூபணம் ஆகியிருக்கிறது.
தோழியர் குழு ஒன்று பஸ், ரெயில் என்று மாறிமாறி மூன்று நாட்கள் சுற்றுலா பயணம் மேற்கொண்டது. பயணத்தின் முடிவில் குறிப்பிட்ட இடம் சென்றடைந்ததும், அவர்களில் டீன்ஏஜ் பெண் ஒருவருக்கு காலில் தாங்கமுடியாத வலி ஏற்பட்டது. டாக்டரிடம் சென்றபோதுதான் அவளால் உண்மையை உணர்ந்துகொள்ள முடிந்தது.
பயணத்திற்கு சவுகரியமானது என்று கருதி, இறுக்கமான ஜீன்சை அவள் தொடர்ச்சியாக பயன் படுத்திவிட்டாள். அது அவளுக்கு `மெரால்ஜியா பாரஸ்தெற்றிகா’ என்ற பாதிப்பை உருவாக்கிவிட்டது.
பெண்களின் அடிவயிற்றில் இருந்து தொடைப் பகுதிவழியாக மெல்லிய நரம்பு ஒன்று செல்கிறது. அதை ஜீன்சும், பெல்ட்டும் போட்டிபோட்டு இறுக்கி, கடுமையான கால் வலியை உருவாக்கிவிட்டது. இந்த வலியும், அவஸ்தையும் முழுமையாக நீங்க வேண்டும் என்றால் சில மாதங்களாகும். அதன் பாதிப்பு மிக அதிகம் ஆகிவிட்டால், ஆபரேஷன் தேவைப்படும்.
நடுத்தர வயதினர் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்தால் அவர்களது ஜீரண செயல்பாடுகள் குறையும் என்றும் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. 
இடுப்பு பகுதி தொடர்ந்து இறுக்கப்படுவதால், அவர்கள் முதுகெலும்பும் நெருக்கடிக்கு உள்ளாகிறது.
ஜீன்ஸ் உடலை இறுக்குவதால் சருமத்தில் காற்று படாது. அதனால் வியர்வை தேங்கி, கிருமித்தொற்று உருவாகும். உடல், உடையால் இறுக்கப்படுவதால், ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. அதனால் சருமத்தில் சுருக்கம், வறட்சி, லேசான காயங்கள் ஏற்படுவதாகவும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெண்களைவிட ஆண்களுக்கு ஜீன்ஸ் தரும் பாதிப்பு அதிகம். `ஆண்களின் இனப்பெருக்க திறன் குறைய என்ன காரணம்?’ என்பது பற்றிய ஆராய்ச்சி, சுவீடனில் நடந்தது. `இறுகிய ஆடைகள் அணிவதே அவர்களின் இனப்பெருக்க சக்தி குறைபாட்டிற்கு காரணம்’ என்று கண்டறிந்தார்கள். அதை தொடர்ந்து `சுவிடிஷ் டைட் பேண்ட் தியரி’ என்ற ஒரு கொள்கையை உருவாக்கினார்கள்.
இறுக்கமான ஜீன்ஸ் போன்றவைகளை அணியும்போது உயிரணு உற்பத்தி குறைந்துபோகிறது. இறுக்கமான ஜீன்சை தொடர்ந்து அணிகிறவர்களின் உயிரணு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும்.
சிறுவர்களுக்கு இறுக்கமான உள்ளாடைகளையோ, ஜீன்ஸ்களையோ அணிவிக்க வேண்டாம். அணிவித்தால் எதிர்காலத்தில் அவர்கள் ஆண்மைக்குறைபாடு கொண்டவர்களாக ஆகக்கூடும்.
ஜீன்ஸ் அணிவதால் இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், பேஷன், சவுகரியம் போன்றவைகளை அடிப்படையாகக்கொண்டு பலரும் அதைத்தான் அணிய விரும்புவார்கள். அவர்கள் பாதிப்பு இல்லாத அளவிற்குரிய ஜீன்ஸ்களை தேர்ந்தெடுத்து அணியவேண்டும். 
`ஸ்கின் பிட்’ ஜீன்ஸ் அணிபவர்கள் நெகிழ்வுதன்மை கொண்ட துணிகளில் தயாரித்தவை களை வாங்கவேண்டும். `ஸ்ட்ரச்சபிள் ஜீன்ஸ்’ என்று சொல்லப்படும் அவை, நெகிழும் தன்மை கொண்டிருப்பதால் உடலை இறுக்காது.
பேஷன் என்ற பெயரில் தன் இடுப்பளவைவிட குறைந்த அளவிலான ஜீன்ஸ்களை ஒருபோதும் வாங்கக்கூடாது. தன் உடலுக்கு பொருத்தமானவைகளை மட்டுமே வாங்கவேண்டும்.
தொடர்ச்சியாக ஒருபோதும் ஜீன்ஸ்களை அணியாதீர்கள். அதுவும் கோடைகாலத்தில், ஜீன்ஸ்கள் அணிவதை தவிர்த்திடுங்கள். 
தூர பயணம் மேற்கொள்ளும்போது ஸ்கின் பிட் ஜீன்ஸ் அணியவேண்டாம். அணிந்துகொண்டு காலுக்கு மேல் கால்போட்டபடி பயணம் மேற்கொள்ளவும் வேண்டாம். ஜீன்ஸ் அணிபவர்கள் பேஷனைவிட ஆரோக்கியம் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
Source:மாலை நாளிதழ்

1 comments:

Anonymous said...

Fashion endra peyaril naluku naal makkalin arogyam kuraindu konde pogiradu.

jeans podupavargal purindu kondal sari.

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.